(கண்களின்)
மின்னல்கள் சேமிக்கும்
விஞ்ஞானம் போதித்தவளே !
இந்த காதல் நாத்தீகனை
பக்தனாக்கி அருள் செய்தவளே !
தூரத்தில் இருந்தே
நெருக்கத்தின் கதகதப்பை
நெஞ்சுக்குள் மூட்டியவளே !
தேரும் நீ - அதில்
ஏறும் தேவதையும் நீ
உன்னை - நீ
சுமந்தால்தான் அழகு !
இரட்டைச் சடை - பூக்கள்
மணக்கும் குட்டித் தேர் வடம் !
எந்த தீர்க்க தரிசியோ
சரியாக வைத்தான்
அந்த தெருவுக்கு
"தேரோடு வீதி " என்று !
வந்தாய் மழை
மூட்டமாய் - பொன்னான
பருவகாலம் தோறும்
விடாது கொட்டி தீர்த்தாய்
இள(மை) மழையை !
தென ்றலின் சிறு
மோதலுக்கு
தெருமுனை
தாண்டிவிடும் அதிசய
இறகு நீ ! - கடந்து
போகும் போது விசிறப்பட்ட
காற்றுப் பட்டு
வேர்த்து விறுவிறுத்து
நின்றவன் நான் !
உன் அழகை
அப்பிக்கொள்ளும் வரை
காத்திருக்கும் - என்
இமைகளின் வலியினை
நீ பொறுக்காமல்
சட்டென்று ஓடிவிடுவாய்
வீட்டுக்குள் !
திடமான தேநீர் நிறத்து
கட்டம் போட்ட - பள்ளிச்
சீருடையை துறந்து
தாவணி உடுத்தி - நீ
பவனி வந்த - அந்த
"புனித வெள்ளி"க் கிழமைகள் !
இப்போது கவிபாடு
பார்ப்போம் என்று - என்
வார்த்தைகளை நீ
சிறை பிடித்து விளையாடிய
பொற்கிழமைகள் !
....................(போதும் போதும்)
என் முன் நிகழ்ந்த காலமாய்
இருந்த நீ - கடந்த காலமா ய்
போய்விட்ட இந்நாளில்
கண்களுக்கு எட்டாத
தூரத்தின் பசுமையினை
காலடியில் முளைக்க
வைத்தாய் - ஏதோ ஒரு
நண்பனின் முகவரி
தேடப்போய் - டைரிக்குள்
இருந்து தவறி விழுந்த
(உன் புகழ் பாடும் )
பழங்கவிதை காகிதத்தின் வழி !
(அந்த)
"தேரோடிய" வீதிக்கு - திருவிழா
பார்க்க வரும் திருவிழாவாய்
ஆண்டுக்கு ஒருமுறை
வந்து போயேன் - அழகான
பெயர் அந்த வீதிக்கு விளங்கட்டும் !